Thursday, May 3, 2007

ஐ.டி., பணியாளர்களின் எதிர்காலம்???

1996 முதல் 2000 ம் ஆண்டுவரை:
‘+2 முடிச்சிட்டியா..உடனே ஏதாவது கம்ப்யூட்டர் கோர்ஸ் பண்ணி ஐ.டி., கம்பெனியில சேரப் பாரு....
’20012003 ம் ஆண்டுவரை:
‘+2 முடிச்சியா...கம்ப்யூட்டர் படிச்சி டைம் வேஸ்ட் பண்ணாத...ஐ.டி., துறை கவுந்துருச்சி. வேற ஏதாவது கோர்ஸ் பண்ணு...’
2004 முதல்...
‘+2 முடிச்சிட்டியா... கம்ப்யூட்டர் இன்டஸ்ட்ரி திரும்ப பூம் ஆயிடுச்சி. உடனடியா சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் பண்ணு, இல்லைன்னா எம்.சி.ஏ., பண்ணு. வேலை நிச்சயம்...’
இந்த உரையாடல்கள், மிகச் சில ஆண்டுகளுக்குள் ஐ.டி., துறையில் நடந்திருக்கும் பெரிய மாற்றங்களை சுட்டிக் காட்டும் சில எடுத்துக் காட்டுகள்....சில காலமாக சற்று சரிவைச் சந்தித்த ஐ.டி., துறை, 2003ம் ஆண்டுவாக்கில் பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்த காரணத்தால் மீண்டும் நிமிரத் துவங்கியது.
இந்த வளர்ச்சியின் எதிரொலியாக, +2 முடித்துவிட்டு வேறு துறைகளுக்கு செல்லவிருந்த மாணவர்கள் ஐ.டி., துறையின் பக்கம் பார்வையைச் செலுத்தத் துவங்கினர். இந்த நேரத்தில் சுயநிதி இன்ஜினியரிங் கல்லுõரிகள், தனியார் தொழில்நுட்ப மையங்களும் பல்கிப் பெருகின. தங்கள் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி காசு பார்ப்பதற்காக, மொத்தமாக ‘வாங்கிக்’ கொண்டு விண்ணப்பம் வாங்கும் அத்தனை மாணவர்களையும் வளைத்துப் போடும் நடவடிக்கையை துவங்கி, அதை தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றனர்.
விளைவு...இன்று கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் பெருகியுள்ளது. அவர்கள் அத்தனை பேருக்கும் வேலை கிடைக்கவில்லை என்றாலும், பாதிக்கும் மேற்பட்டவர்களை பெரிய ஐ.டி., நிறுவனங்கள் கொத்திச்கொண்டு போகின்றன. பன்னாட்டு நிறுவனங்களின் கவர்ச்சி விதிகளின் படி, முன் அனுபவம் இல்லாதவர்களுக்குக் கூட 20 ஆயிரம் ரூபாய் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது.
ஐ.டி., நிறுவனங்கள் மட்டுமின்றி பி.பி.ஓ.,க்கள் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்கள் பயின்றவர்களுக்கு இரட்டை இலக்க சம்பளத்தை கொடுத்து தக்க வைக்கத் துவங்கியிருக்கின்றனர். இந்த நல்ல மாற்றம்தான் இன்னும் சில ஆண்டுகளில் சிக்கல்களை ஏற்படுத்தப்போகிறது...எப்படி?
ஐ.டி., துறை வளர்ச்சியில் இருக்கும் இன்றைய சூழலில், பெரிய ஜ.டி., நிறுவனங்களில் தெடர்ந்து ஆள் தேவை விளம்பரங்கள் அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றன. 100 பேர் செய்யவேண்டிய வேலைக்கு 150 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படும் அத்தனை பேருக்கும், குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் அளிக்கப்படுகிறது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணி அனுபவம் இல்லையென்றாலும் அதைப் பற்றி நிறுவனங்கள் கவலை கொள்வதில்லை.
வேலைக்கு சேர்ந்த ஆறு முதல் ஒரு ஆண்டுக்குள் அத்தனை பேரையும் நிரந்தர பணியாளர்களாக்க வேண்டும். அத்துடன், சாஃப்ட்வேர் டெவலப்பர், புரோகிராமர், நெட்வொர்க் இன்ஜினியர் என அனைத்து பணியாளர்களுக்கும் குறைந்தபட்சம் 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை சம்பள உயர்வு அளித்தாக வேண்டும்.
கம்ப்யூட்டர் துறையின் வளர்ச்சி எப்போதும் ஒரே சீராக இருக்காது என்பதை நன்கு உணர்ந்துள்ள நிறு வனங்கள், ஏற்கனவே பணியில் அமர்த்தியவர்களின் சம்பளத்தை தொடர்ந்து உயர்த்திக் கொண்டேயிருக்க தற்போது தயக்கம் காட்டத் துவங்கியிருக்கின்றன. எனவே, வேலை அனுபவம் பெறுவதற்காக குறைந்த சம்பளத்தில் வேலைக்கு செல்ல மாணவர்கள் தயாராவதை சாதகமாக்கிக் கொள்ளும் நிறுவனங்கள், படிப்பு முடிந்ததும் அதிகளவில் அவர்களை பணியமர்த்திக்கொள்கின்றனர். இதில் பாதிக்கப்படுவது, நிறைந்த அனுபவத்துடன் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள்.
நிலைமையை புரிந்துகொண்டு வேறு வேலை தேடும்போதுதான் அந்த பணியாளர்களுக்கு நடைமுறைச் சிக்கல்கள் புரியவருகின்றன. ஏற்கனவே வாங்கிய சம்பளத்தை விட சற்று அதிகமாக வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் பணியாளர்களின் சம்பள எதிர்பார்ப்பை நிறைவு செய்ய நிறுவனங்கள் தயாராக இல்லை. அத்துடன், ஏற்கனவே செய்துகொண்டிருக்கும் புராஜெக்ட் அளவை விட அதிகளவில் பணியாளர்களை சேர்த்து வைத்துள்ள பல நிறுவனங்களும், புராஜெக்ட் அளவை அதிகப்படுத்துவதா அல்லது பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதா என குழம்பி நிற்பதால், ஐ.டி., பணியாளர்களின் துறையின் எதிர்காலம் ஆச்சரியக்குறியிலிருந்து கேள்விக் குறியாக மாறிக்கொண்டிருக்கிறது.