Saturday, April 21, 2007

பைரஸி சாஃப்ட்வேர்... ஏன்? எதற்கு? எப்படி?


'எதுக்கு சார் பத்தாயிரம் 20 ஆயிரம்னு காச கரியாக்குறீங்க...என்ன வேணும்னு சொல்லுங்க, அதையே 100 ரூபாய்க்கு தர்றோம். ஒரிஜனல விட சூப்பரா இருக்கும். 2 க்கு மேல வாங்குனீங்கன்னா எக்ஸ்ட்ரா ஓண்ணு ஃப்ரீயா தர்றோம்...ரேட் பாத்து பண்ணிக்கலாம் சார்' இது வெளிநாட்டு பொருட்களின் போலிகளை வாங்க முற்படுவோரிடம் விற்பனையாளர் பேசும் டயலாக் இல்லை... சில ஆயிரங்கள் முதல் பல்லாயிரம் ரூபாய் வரை விலை கொண்ட சாஃப்ட்வேர்களின் பைரஸி எனப்படும் போலிகளை விற்பனை செய்யும் விற்பனையாளரின் வியாபாரப் பேச்சு. வீட்டுக்குள் அல்லது சிறிய அளவில் கம்ப்யூட்டரை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் சாஃப்ட்வேர்கள் மற்றும் ஆபரேடிங் சிஸ்டம்களில் 90 சதவீதம் போலியானவை. மிகுந்த சிரத்தையுடன் பல மாதங்கள் ஆய்வுசெய்து வடிவமைக்கப்படும் ஆபரேடிங் சிஸ்டம்கள் மற்றும் சாஃப்ட்வேர்களைக் காட்டிலும், அவற்றின் பைரஸிகளுக்கு மவுசு அதிகமாக இருப்பது ஏன்? அசல் மென்பொருள்களைப் புறக்கணித்துவிட்டு, அவற்றின் போலிகளின் விற்பனை அதிகரிக்கக் காரணம் என்ன? இதற்கான காரணத்தை தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பார்வையில் அலசாமல், சாதாரண பயனாளர் ஒருவரின் பார்வையிலிருந்து பார்த்தால், பைரஸிகளுக்கான சரியான காரணம் புரிந்து விடும்.
அசல் சாஃப்ட்வேரா? எங்கு விற்கப்படுகிறது... எப்படி வாங்குவது... என்ன விலை...?
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் மட்டுமல்ல...ஆடி மாதத்தில் கூட தள்ளுபடி என்ற பெயரில் டி.வி, உள்பட அனைத்து எலெக்ட்ராணிக்ஸ் மட்டுமின்றி குண்டூசிகளின் விற்பனையும் களைகட்டும். தங்களது தயாரிப்புகளை இந்தந்த இடங்களில், இந்தந்த விலைகளில் வாங்கலாம் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து கண்காட்சிகள் மூலமும், பெரிய கடைகளில் காட்சிப்பொருளாக்கியும் விளம்பரப்படுத்துகின்றன. ஆனால் , டி.வி, பெட்டிக்கு சமமாக அனைத்து வீடுகளையும், அலுவலகங்களையும் அலங் கரித்துவரும் கம்ப்யூட்டர்களுக்கு முதுகெலும் பாக செயல்படும் ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் முக்கிய சாஃப்ட்வேர் தொகுப்புகள் எங்கு விற்பனை செய்யப்படுகின்றன மற்றும் அவற்றின் விலை என்னவென்று சாதாரண பயனாளருக்கு துல்லியமாக, விரிவாக கூற எவரும் முன்வருவதில்லை. பைரஸி சாஃப்ட்வேர்கள் வைத்திருப்பது தண்டனைக்குரியது என கூறிக்கொள்ளும் மைக்ரோசாஃப்ட் உள்பட பெரிய நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகள் மற்றும் அவற்றின் நன்மைகளைப் பற்றி இதுவது பொதுமக்களுக்கு புரியவைத்து (மற்ற எலெக்ட்ராணிக்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் செய்வது போல) அசல் மென்பொருள்கள் பற்றிய தெளிவை இதுவரை ஏற்படுத்த, ஏனோ தயக்கம் காட்டுகின்றன. அட்டகாச தள்ளுபடிகள், அதிரடி சலுகைகள் என கவர்ச்சி விளம்பரங்கள் அளிக்காமல், 'இந்த தயாரிப்புக்கான விலை இது...இதை வாங்கினால் இதுபோன்ற பயன்களைப் பெறலாம்' என விளம்பரங்களை (அவுட்லுக், வீக் போன்ற மேல்தட்டு பத்திரிகைகளில் அல்ல) பொதுமக்களுக்கு புரியும் படி பத்திரிகைகளில் விரிவாக அளிக்கலாம். ஆனால் அதைச் செய்ய நிறுவனங்களால் முடிவதில்லை. அசல் மென்பொருள்களை அலைந்து திரியாமல் எங்கு வாங்குவது, அவற்றின் விலைப்பட்டியல் மற்றும் என் னென்ன பயன்கள் என்பதை விளக்க யாரும் இல்லாததால் பயனாளர்கள் வேறு பாதை தெரி யாமல் பைரஸியின் பக்கம் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அசல் மென்பொருள் மற்றும் ஆபரேடிங்சிஸ்டம் தான் பயன்படுத்துவேன் என அடம்பிடிக்கும் பயனாளர்களிடம் கம்ப்யூட்டர் டீலர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கூறும் அறிவுரை தான் இக்கட்டுரையின் முதல் பாராவில் நீங்கள் படித்தது... அடுத்து, அதன் விலை.... அசெம்பிள் செய்யப்படும் கம்ப்யூட்டரின் விலைக்கும், நிறுவன தயாரிப்பு கம்ப்யூட்டர்களுக்கும் அதிக விலை வித்தியாசமில்லை. தற்போதுள்ள சூழலில் தரமான கம்ப்யூட்டர்கள் கூட 30 ஆயிரத்து சொச்சத்தில் கிடைத்து விடுகின்றன. ஆனால் அவற்றில் ஒன்று அல்லது இரண்டு அசல் சாஃப்ட்வேர்களை உள்ளிட வேண்டுமெனில், கம்ப்யூட்டர்களின் மொத்த விலைக்கு இணையாக பணம் கொடுக்கவேண்டியிருக்கிறது. விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டமின் விலை சற்று குறைவாக இருந்தாலும், மற்ற சாஃப்ட்வேர்களின் விலை மிக அதிகமாக இருப்பதால் அவற்றின் பக்கம் செல்வதற்கு, சிறிய நிறுவனங்கள் மற்றும் சாதாரண பயனாளர்கள் அச்சம் கொள்கின்றனர். இதை சாதகமாக்கிக்கொண்டு, அசெம்பிள் கம்ப்யூட்டர் விற்பனையாளர்கள் மற்றும் சர்வீஸ் இன்ஜினியர்கள் சர்வ சாதார ணமாக பைரஸி சாஃப்ட்வேர்களை தயாரித்து சகட்டுமேனிக்கு விற்றுத் தள்ளுகின்றனர். இவை அனைத்தையும் அறிந்திருந்தும், தடுக்க வழிகள் தெரிந்திருந்தும் அவற்றை நடைமுறைப்படுத்தாமல் நிறுவனங்கள் பார்த்துக்கொண்டிருப்பது தான் வேடிக்கை. வீட்டில் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒரு சிலர் பைரஸி சாஃப்ட்வேர் வாங்குவதால், தங்கள் தயாரிப்புக்கு எந்த பாதிப்பு வராது என்றும், அசல் மென்பொருள்கள் வாங்குவதில் உறுதியாக இருக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிப் பயனாளர்கள் இருக்கும் வரை தங்களுக்கு கவலையில்லை என்றும், நிறுவனங்கள் திட்டவட்டமாக நம்புகின்றன.பைரஸி பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பயனாளர்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் கூட, அசல் மென்பொருள்களின் உரிம சிக்கல்கள் மற்றும் துரிதமற்ற சேவை ஆகியவற்றால் வெறுத்துப் போய் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முழு சுதந்திரம் அளிக்கும் ஓப்பன் சோர்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்த முனைகின்றனர். இனியும் , கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான விற்பனையை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால்... அசல் மென்பொருள்கள் என்பது வெறும் மாஸ்டர் காப்பியாக மாறி, பைரஸி சாஃப்ட்வேர்கள் தான் அசலானவை என்ற நிலை உருவாகிவிடும்!

Friday, April 20, 2007

வேலை தேடுவோர் ஜாக்கிரதை!

கடனை வாங்கி அல்லல் பட்டு. வாயைக் கட்டி வயித்தைக் கட்டி பிள்ளைகளை படிக்கவைக்கும் பெற்றோரின் ஒரே கனவு...பிள்ளை நல்ல வேலைக்கு போய் கை நிறைய சம்பளம் வாங்குவான்(ள்) என்பது தான். பிள்ளைகளின் படிப்புக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் பெற்றோர்களின் ரத்தத்தை மொத்தமாக உறிஞ்சி எடுத்துவிடுகின்றன பள்ளி/கல்லுரிகள்... இதையெல்லாம் தாண்டி படித்து முடிக்கும் இளையர்களிடம் வேலை வாய்ப்பு என்றபெயரில் நூதன முறையில் கொள்ளையடித்து, அப்பாவி பெற்றோரின் களைத்துப்போன மிச்ச சொச்ச ரத்தத்தையும் உறிஞ்ச புறப்பட்டுள்ளன, சில வேலைவாய்ப்பு கன்சல்டன்சி நிறுவனங்கள்.கன்சல்டன்சி என்ற பெயரில் அந்த நிறுவனங்கள் செய்யும் மோசடிகளில் சில... வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளையர்களை வலைபோட்டு பிடிக்க சில கன்சல்டன்சி நிறுவனங்கள் கடைபிடிக்கும் முக்கியமான வழி... முன்னணி செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களில் கவர்ச்சி விளம்பரங்கள் அளிப்பது தான். தங்கள் நிறுவனத்திலேயே வேலைவாய்ப்பு இருப்பது போன்ற தோரணையில் அவர்கள் அளிக்கும் விளம்பரங்களை நம்பி செல்பவர்களிடம், புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்கள் கொண்ட பட்டியலைக் காட்டி, ‘இவங்களெல்லாம் நம்ம கிளையன்ட்ஸ்.. உங்களுக்கு கண்டிப்பா வேலை இருக்கு. சோ..டெப்பாஸிட் கட்டிட்டு வேலைல சேந்துக்கலாம்’ என ஒப்புக்கு நடத்தப்படும் நேர்காணலின்போது மூளைச் சலவை செய்வர். எப்படியும் வேலைகிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பல 100 ரூபாய் முதல் சில ஆயிரங்களை பெற்றோரிடமிருந்து அல்லது கடனாக வாங்கிக் கொடுத்துவிட்டு காத்திருக்க வேண்டும். சில நாட்கள்...பல நாட்கள்... சில மாதம் என அந்த நிறுவனங்கள் காலம் கடத்துவர். அதன் பின் அந்த இளைஞருக்கு நிச்சயம் வேறு எங்காவது வேலை கிடைத்திருக்கும். அல்லது வெறுத்துப் போய் வேறு ஊருக்குப்போய் (பெரும்பாலும் பெங்களூர்) வேலை தேடுவார்...இதே போல பணம் செலுத்திய ஏராளமானோர் கடுப்பாகி வேறு முயற்சிகளில் கவனம் செலுத்தத் துவங்கி விடுவதால், பணம் வசூல் செய்த கன்சல்டன் சிகளுக்கு ‘கொள்ளை’ லாபம்.பொத்தாம்பொதுவாக அனைத்து கன்சல்டன்சிகளையும் ‘தில்லாலங்கடிகள்’ என கூற முடியாது. தொழில்நுட்ப போர்வையில் ஒளிந்திருக்கும் அந்தவகை நிறுவனங்களுக்கு போட்டி நடத்தினால், சிறிய அளவில் கம்ப்யூட்டர் சென்டர்களை வைத்து போணி ஆகாமல் ஈ ஓட்டிக் கொண்டிருப்போர் முக்கிய இடங்களைப் பிடிப்பர்! வேலைவாங்கித் தருகிறோம் என்ற போர்வையில் கன்சல்டன்சி வியாபாரிகள் துவங்கியிருக்கும் நிறுவனத்தில் தான் தற்போது சுடச்சுட வேலைவாய்ப்பு யாவாரம் நடந்து வருகிறது. இளைஞர்களின் வேலை வாய்ப்பு தாகத்துக்கு தண்ணீர் தருகிறேன் என அழைத்து திகட்டத் திகட்ட அல்வா கொடுத்துவரும் அந்த கன்சல்டன்சி நிறுவனங்கள், தங்களிடம் வேலை கேட்டு வருபவர்களிடம் ‘உங்களுக்கு இன்னும் திறமை பத்தல...கொஞ்சம் சி, சி++ பயிற்சி கொடுத்து டெஸ்ட் வச்சி தேத்திடலாம்...அப்புறம் எம்.என்சி.,ல வேலை நிச்சயம்’ எனக் கூறி, பெரிய பட்டியலை நீட்டுவர். வேலைவாய்ப்புக்கான பதிவுக் கட்டணம், பயிற்சிக் கட்டணம் என பணத்தை அழுதுவிட்டு நிற்போர், எந்தெந்த நிறுவனங்களில் எங்களுக்கு வேலைவாங்கித் தரப்போகிறீர்கள் என கன்சல்டன்சியிடம் கேட்டுவிட்டால், அவ்வளவு தான்....‘இந்த பங்களா கட்ட ஏது இவ்ளோ காசு’ என்று ஒரு வார்டு கவுன்சிலரிடம் கேட்டால் அவரது கொந்தளிப்பு எப்படியிருக்கும்?! அதையே கொஞ்சம் நாகரீகமாக கன்சல்டன்சிகாரர்களிடம் காணலாம். ரூபாயை கட்டிவிட்டு சொல்லும் தேதிகளில் எல்லாம் அவர்கள் முன் நின்று பவ்யமாக குட்மார்னிங் வைத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். கடைசியாக, வேலை கிடைக்குமா... கிடைக்காதா? என கொஞ்சம் எரிச்சலுடன் கேட்டால், ‘நீங்க படிச்சது எம்.என்.சி.,க்கு போதாது. இன்னும் ஒரு கோர்ஸ் இருக்கு.. அதை நம்ம கம்ப்யூட்டர் சென்டர்ல வந்து படிச்சுக்கங்க’ என அழகாகக் கூறுவர்.இவர்களிடம் பணம் கொடுத்து வெறுத்துப்போய் வேறு வேலை தேடுவோர் எண்ணிக்கை ஏராளம்..இதுபோலவே சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல நகரங்களில் பெருகிவரும் கன்சல்டன்சிகளை தடுத்து நிறுத்த முடியாது...நம் பணம் அவர்கள் பர்ஸுக்குள் செல்வதை வேண்டுமானால் தடுத்து நிறுத்தலாம்.. திறமை, தகுதி, படிப்பு இருந்தால் இது போல பணம் கொடுத்து பதிவு செய்யும் நிறுவனங்களிடம் சென்று சிக்கிவிடாமல் நேரடியாகவோ அல்லது நேர்மையாக செயல்படும் கன்சல்டன்சி அல்லது வலைமனைகளில் பதிவு செய்தோ வேலைவாய்ப்பு பெற முயற்சிக்கவும்!